No icon

‘முதுமை நம் வருங்காலம்’

முதியவர்கள் அனுபவம் நிறைந்த ஞானிகள்!

 ‘மூத்தோர்’, ‘முதியோர்’, ‘பெரியோர்’, ‘மூத்த குடிமக்கள்’ என்றெல்லாம் அடைமொழி கொடுத்து அழைக்கப்படும் ஒவ்வொருவருக்கும் மூத்த குடிமக்கள் அல்லது தாத்தா-பாட்டிகள் யாவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன். மூத்த குடிமக்களைப் பற்றி எழுதும்போதே எனது எழுதுகோல் அழுது, வேதனையின் வெளிப்பாடாக எழுத்து என்கிற கண்ணீரை வெளிப்படுத்துவதாக உணர்கிறேன்.

மூத்த குடிமக்கள் ஒரு சமூகத்தின் முதிர் கனிகள்! அவர்கள் இந்நாட்டின் இரண்டாம் நிலை குழந்தைகள்! அவர்களின் அனுபவம் அகிலத்தில் இல்லையென்றால் எல்லாமே அரைகுறைதான். ஆனால், இன்று அவர்களை மூத்தோர், முதியோர், ‘வயோதிகர்’ என்ற அடைமொழிகளைக் கொடுத்து அடக்கி, அமுக்கி வைக்க முற்படுகிறது இச்சமூகம். பயனற்றவர்கள், பயனில்லாதவர்கள், இயலாதவர்கள், இல்லாதவர்கள், முடியாதவர்கள் என்று முடக்கிப் போட்டிருக்கிறது. முதிர்ச்சியில் இருக்கும் தேர்ச்சியைத் தெரியாமலேயே தேய்ந்து, தீய்ந்து போகிறது இச்சமூகம்!

முதியவர்கள் முடியாதவர்கள் அல்லர்; முடிந்த மட்டும் தங்களை இழப்பவர்கள்! அவர்கள் அழகற்றவர்களாகத் தெரியலாம்; நம்மை அழகுப்படுத்துவதற்காகத் தங்கள் அழகை இழந்தவர்கள்! அவர்கள் அழுக்கானவர்களாகத் தெரியலாம்; ஆனால், அழுக்காறு அற்றவர்கள்! நாகரிகமற்றவர்களாகத் தெரியலாம், தென்படலாம்; ஆனால், நாகரிகத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்தவர்கள்! நாம் அவர்களை அறிவற்றவர்களாக நினைக்கலாம்; ஆனால், அறிவாளிகளையும், ஆன்றோர்களையும் இச்சமூகத்திற்கு வழங்கியவர்கள்! எளிமையானவர்கள் என்று எள்ளி நகையாடலாம்; ஆனால், வலிமையானவர்களை இச்சமூகத்திற்கு வழங்கியவர்கள்!

அவர்களைப் பார்த்து பரிதாபப்படத் தேவையில்லை. பாசம் காட்டுவதும், அவர்களைப் பராமரிப்பதுமே நமது கடமை. அவர்களைப் பார்த்து தலை குனியும் தலைமுறை உருவாகி வருவதைப் பார்க்கும்போது உள்ளம் உறுத்துகிறது. அவர்கள் தலைவணங்கி தொழ வேண்டியவர்கள் என்று வளரும் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுப்போம். அவர்கள் நம் கண்களுக்கு நேராகத் தெரியும் தெய்வங்கள் என்று தெரிய வைப்போம்.

ஆலயமில்லாத் தெய்வங்களை அன்பென்னும் அரண்மனைக் கட்டி, இதயத்தில் சுமப்பதற்குப் பதிலாகத் தூக்கிப் போடுவதன் காரணம் என்ன? அவர்கள் எல்லாவற்றையும் நமக்காக இழந்தவர்கள். நேற்றைய அவர்களது அழகு, அறிவு, ஆற்றல், வலிமை, வாய்ப்பு, உழைப்பு, உயிர் அனைத்துமே இன்று நம்மிடம் இருக்கின்றது. நாம் வாழ வேண்டுமென்பதற்காகத் தங்களது வாழ்வை நமக்கு வழங்கியவர்கள். நமக்காக, நாம் உயர் வாழ்வை அடைவதற்காகத் தங்களை உடைத்தவர்கள், உயிரையே கொடுத்தவர்கள்!

நாம் உயர்ந்த இடத்தில் உட்கார வேண்டுமென்பதற்காகத் தங்களை முழுமையாகப் பங்கிட்டுப் பலியாக்கியவர்கள்! நமது வீடுகளில் பஞ்சமும்-பட்டினியும் பாய்விரித்துப் படுத்திருந்தபோது, பானையில் இருந்ததை எல்லாம் பங்கிட்டுப் பகிர்ந்து கொடுத்து விட்டு, ஈரத்துண்டை இடுப்பில் கட்டிவிட்டுப் படுக்கைக்குச் சென்ற தியாகிகள் நமது பெற்றோர். அவர்கள் கொடுத்தப் பாலுக்கும், அவர்களின் கடினமான உழைப்புக்கும், இரத்த வியர்வைத் துளிகளுக்கும் கணக்குப் பார்க்க முடியுமா?

அவர்களுக்குச் செலவாகும் பணத்தை நாம் கணக்கிட்டுப் பார்ப்பது நமது கடுமையான இதயத்தின் வெளிப்பாடுதானே! அவர்கள் அன்று கணக்குப் பார்த்திருந்தால், நாம் அவர்களின் கருவறையிலிருந்து வெளிவந்து கண்களைத் திறந்து உலகைப் பார்த்திருக்க மாட்டோம். எனவே, அவர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்வோம். அவர்களின் தளர்ந்த வாழ்வில் தளராது தயவு காட்டுவோம்.

முதியவர்களின் அன்புக்கும், அனுபவத்திற்கும், பாசத்திற்கும் முன்னால், நாம் ஒன்றும் இல்லாதவர்கள். ‘முதியவர்கள் அனுபவங்களைச் சுமந்து வாழும் ஞானிகள்’ என்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். மேலும், அவர்களின் பாசத்தைப் பற்றி திருத்தந்தை கூறும்போது, “அவர்கள் தங்கள் பேரன்-பேத்திகளை உண்மையான பாசத்தோடு அரவணைப்பவர்கள்; அவர்களின் மென்மையான அன்பு இறைவனோடு உறவு கொள்ள வைக்கிறது” என்றும், “அவர்களின் இந்த மென்மையான, சுதந்திரமான அன்பு இச்சமூகத்தை மேன்மையடையச் செய்கிறது” எனவும் குறிப்பிடுகிறார்.

வயது முதிர்ந்தோரின் பலவீனத்தை ஏற்கத் தெரிந்த சமுதாயமே தன் உறுப்பினர்களுக்கு வருங்காலம் பற்றிய நம்பிக்கையை வழங்க முடியும் என்று ‘முதுமை நம் வருங்காலம்’ என்ற ஏடு குறிப்பிடுகின்றது. இன்று கடவுளாகப் பார்க்கப்பட வேண்டிய முதியவர்கள் சுமைகளாகப் பார்க்கப்படுகிறார்கள். தனிமையும் புறக்கணிப்பும் அவர்களைப் பெருமளவில் பாதிக்கிறது என்றும் அவ்வேடு பதிவு செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மறைமாவட்டங்கள், பங்குத் தளங்கள், திரு அவை குழுமங்கள், அன்பியங்கள், பங்கேற்பு அமைப்புகள் ஆகியவை முதியோர் உலகம் பற்றி கவனமுடன் சிந்தித்து, ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறது.

எனவே, மானுடச் சமூகமே, அன்புக்காக, பாசத்திற்காக மட்டும் ஏங்கும் முதியவர்களை வேதனைப்படுத்தி உறவை வேரறுத்துவிடாதீர்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும், பெற்றுக்கொள்ள வேண்டியதும் ஏராளம் உள்ளன. அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்லர்; எனவே, ‘உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேள்வி கேட்டு கேலி செய்யாதீர்கள். அவர்களிடம் அனைத்து நுட்பங்களும் அடைகாத்துக் கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பாசத்தோடு நமது சந்ததிகளுக்குக் கற்றுகொடுக்க முயற்சி எடுப்போம்.

‘அம்மிக் கல்லுக்குக் குழவி எவ்வளவு அவசியமோ, அதுபோல வீட்டிற்கு ஒரு கிழவி அவசியம்’ என்பதன் பொருளை ஆய்ந்து அறிந்துகொள்வோம். பாட்டி, தாத்தா குடும்பத்தின் மூத்த ஆசிரியர்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம். தமிழ் பண்பாட் டின் பாரம்பரியத்தையும், பாட்டி கதைகள் சொல்லும் அறநெறிச் சிந்தனைகளையும், தாத்தா சொல்லும் வீர விளையாட்டுகளையும் ஆழமாகப் புரிந்து கொள்வோம். ஒவ்வொரு முதியோரும் ஒரு வரலாற்று களஞ்சியம் என்பதைப் புரிந்து புன்னகையோடு அவர்களைக் கண்ணுக்குள் கண்ணாக, நெஞ்சுக்குள் வைத்துக் காத்துக்கொள்வோம்.

இன்று மூத்தக் குடிமக்களின் நிலையைப் பார்த்து பல நேரங்களில் உள்ளம் நிலைகுலைந்து போகிறது. நெஞ்சம் நெகிழ்ந்து போகிறது. கண்களில் கொஞ்சம் ஈரம் எட்டிப் பார்க்கிறது. இதயத்தில் இரக்கமும், கண்களில் கருணையும் சுரக்க வேண்டிய நமக்குக் கல்நெஞ்சம் ஒட்டிக்கொண்டதோ என எண்ணத் தோன்றுகிறது. கனிவோடும், கரிசனையோடும், அன்போடும், அக்கறையோடும், பாசத்தோடும், பண்போடும் இல்லத்திலும், இதயத்திலும் வைத்துப் பராமரிக்கப்பட வேண்டியவர்கள், முதியோர் இல்லங்களில் முதுமையை முடிக்க நாம் காரணமாக அமைந்துவிடக்கூடாது.

வாழும் தலைமுறையே! நமது முதுகிலும் முதுமை சவாரி செய்து கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்பதை உணர்ந்து, முதியோர்களை மென்மையோடு பராமரிப்போம். ஏனென்றால், அவர்களின் அன்பும், பாசமும், உடலும், உள்ளமும், மென்மையானது, மேன்மையானது என்பதைப் புரிந்துகொள்வோம்!

முதியவர்களைத் தடித்த வார்த்தைகளால் தண்டிக்காதீர்கள்; கனத்த வார்த்தைகளால் கண்டித்துக் காயப்படுத்தாதீர்கள். அவர்கள் விடும் ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும் கடவுள் உங்களிடம் கணக்குக் கேட்பார். முதியோர் இல்லாத வீடும், நாடும் அரைகுறை வீடாக, நாடாக இருக்கும். எனவே, வீட்டில் வைத்து முதியோர்களைப் பராமரிப்போம். முதியோர் இல்லங்களை முற்றிலும் துறப்போம்! வாழ்வில் சிறப்போம்!

Comment