குடும்பம் ஒரு கோவில், குடும்பம் ஒரு கதம்பம், குடும்பம் ஒரு பல்கலைக் கழகம், குடும்பம் ஒரு பூந்தோட்டம், குடும்பம் ஒரு குட்டித் திரு அவை... என்றெல்லாம் குடும்பத்தைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கின்றோம். இவையெல்லாம் புனையப்பட்டவை அல்ல; அனுபவத்தால் விளைந்த அமுத மொழிகள்! புரிதலால் எழுந்த புன்னகை வரிகள்.
குடும்பம் பரிணாம வளர்ச்சியின் பரிசு என்று அறிவியல் சாதிக்கிறது. இது எப்படிச் சாத்தியமாகும்? என்று ஆன்மிகம் அடுக்கடுக்காய்க் கேள்விகளை முன்வைக்கிறது. அறிவியலால் அத்தனையும் சாதிக்க முடியுமென்றால், ‘இறந்த மனிதர்களுக்கு உயிர் கொடுக்கலாமே!’ என்று ஆன்மிகம் அழுத்தமாகக் கேள்வியை முன்வைக்கிறது. அதற்குப் பதில் தரும் முயற்சியில் முன்னோக்கி அறிவியல் செல்கிறதே தவிர, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியப் பதிலை இன்னும் பதிவு செய்யவில்லை. அறிவியலால் பதிவு செய்யவும் முடியாது என்பதே உண்மை. ‘குடும்பம்’, ‘குடும்ப அமைப்பு’ என்பது விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்தது என்றோ நாகரிக வளர்ச்சியால் உருவானது என்றோ நவீன வளர்ச்சியின் வெளிப்பாடு என்றோ கூறிவிட முடியாது என்பதை நான் முற்றிலும் உணர்ந்து, இக்கட்டுரையில் கொஞ்சம் ஆழமாகப் பயணிக்க வாசக நெஞ்சங்களை அழைக்கின்றேன்.
குடும்பங்கள் எல்லாம் உருவாகுவதற்கு அடிப்படையாக அமைந்தது திருவிலிலியத்தில் நாம் பார்க்கும் ஆதாம்-ஏவாள் குடும்பம். கடவுள் உலகைப் படைத்தபோது எல்லாவற்றையும் நல்லதெனக் கண்டார். ஆனால், படைப்பிற்கெல்லாம் சிகரமாக மனிதனைப் படைத்தார். ஆணும்-பெண்ணுமாகப் படைத்து முதல் குடும்பத்தை உருவாக்கினார். இதனைத் திருவிவிலியத்தில் தொடக்க நூலின் முன்னுரையில் வாசிக்கின்றோம். ‘இவ்வுலகமும், மனிதனும் உருவானதற்கு முதல் காரணம் இறைவனே ஆவார்’ என்று சொல்லப்பட்டுள்ளது. “அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர்மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். பின்பு ஆண்டவராகிய கடவுள் ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்’ என்றார்” (தொநூ 2:6-7,18).
கடவுள் மனிதனைத் தனியாகப் படைக்காமல், அவனுக்குத் துணையாகவும், இணையாகவும் பெண்ணைப் படைத்தார். இது கடவுளின் கற்பனையில் கனிந்த காவியமே தவிர, விஞ்ஞானத்தால் உருவான விந்தை அல்ல! இது கடவுளின் கரங்களால் விளைந்த ஓவியமே தவிர, அறிவியலால் விளைந்த அற்புதங்கள் அல்ல! கடவுள் இவ்வுலகைச் சந்திக்க ஆசைப்பட்டார். விண்ணில் வாழ்ந்த கடவுள் மண்ணைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார். எனவே, மனிதனாகப் பிறக்க வேண்டுமென்று திட்டம் வகுத்தார். அத்திட்டத்தை நிறைவேற்ற அவர் உலகத்தின் உன்னதமாகவும், உயர்ந்ததாகவும், சிறப்பாகவும், சிறந்ததாகவும் படைத்த குடும்பத்தில் பிறக்க வேண்டுமென்று திட்டம் வகுத்து, தேர்வு செய்த குடும்பமே திருக்குடும்பம்.
நமது கத்தோலிக்கத் திரு அவை இந்தக் குடும்பத்தை, உயரத்தில் வைத்தே உலகத்திற்கும் அடையாளம் காட்டுகிறது. ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையைத் திருக்குடும்பத்திற்கு அர்ப்பணித்து விழா எடுத்து மகிழ்கிறது திரு அவை. இதில் அடங்கியிருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். பொதிந்திருக்கும் பொருள் ஏராளம். திருக்குடும்பமே இன்றும் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
குடும்பம் என்பது மனிதர்களுக்கு வழங்கப்பட்ட அருமையான, அற்புதமான பரிசு! அதை உலகத்திற்கு உணர்த்தவே கடவுள் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கிறார். எந்தக் குடும்பம் கடவுளுடைய திட்டத்திற்கும், திருவுளத்திற்கும், விருப்பத்திற்கும் தங்களைக் கையளிக்கின்றதோ அந்தக் குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாக மாறுகிறது. ஆபிரகாம்-சாரா குடும்பம், யோபு குடும்பம், எல்கானா குடும்பம், தோபித்து குடும்பம் போன்ற குடும்பங்கள் கடவுளின் திட்டப்படி வாழ்ந்ததால், கடவுள் இந்தக் குடும்பங்களை ஆசீர்வதிப்பதையும், அவர்களது துன்பங்களில் துணையிருப்பதையும் திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது. அதேபோன்றுதான் யோசேப்பு-மரியா-இயேசு திருக்குடும்பத்தைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார். ஏனென்றால், அவர்கள் ‘உம்முடைய திட்டப்படியே ஆகட்டும்’ என்று தங்களை முழுமையாகக் கடவுளுக்குக் கையளித்தார்கள் (லூக் 1: 37-38; மத் 1:24).
தன்னலத்தில் வாழும் குடும்பங்கள் தங்களை மட்டுமே உயர்த்திக்கொள்ள வேண்டுமென்கிற பேராசையில் வாழ்கின்றன. ஆனால், திருக்குடும்பம் உலக மக்களின் மீட்புக்கான எண்ணம் கொண்டிருந்தது. தங்களைப் பற்றியோ, தங்களுக்குக் கிடைத்த அவமானங்களைப் பற்றியோ கவலைப்படவில்லை. அவர்களின் கவலையெல்லாம், உலக மக்களைப் பற்றியே இருந்தது. தங்களது குடும்பம் தங்களுக்காக மட்டுமல்ல, பிறருக்காக என்கிற பொதுநலன் அவர்களில் வெளிப்பட்டது.
இக்குடும்பம் உழைப்பை நேசித்தது. உழைப்பு கடவுள் கொடுத்த மாபெரும் வரம்! அது சாபம் அல்ல; உழைப்பின் வழியாகத்தான் மனிதன் தன் அளவிட முடியாத ஆற்றலை வெளிப்படுத்தவும், உணர்ந்து கொள்ளவும் முடியும். ‘உழைக்காதவன் உண்ணவும், வாழவும் கூடத் தகுதியற்றவன்’ என்று திருவிவிலியம் கூறுகிறது. “உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது” (2தெச 3:10) என்கிறார் தூய பவுல். தன் தந்தை யோசேப்பு செய்த தச்சு வேலையைக் கற்று, அவரோடு உடனிருந்து இயேசு பணியாற்றினார். ஆகவே, உழைப்பு தன் குடும்பத்தை மட்டும் அன்று; உடன் வாழ்வோரையும், உலகையும் உயர்த்தவல்லது.
‘ஆண்டவரே, எனக்கு மட்டும் அல்லது எனது குடும்பத்திற்கு மட்டும் ஏன் இந்தத் துன்பம்?’ என்று கடவுளைப் பார்த்துக் கேட்கிறோம் அல்லது அவரைத் திட்டித் தீர்க்கிறோம். திருக்குடும்பம் துன்பங்களைத் தூக்கிச் சுமந்த குடும்பம். துன்பங்களை இன்பமாக்கி இறைவனில் மகிழ்ந்த குடும்பம். கருவறை முதல் கல்லறை வரை காயங்களையும், கல்வாரி சிலுவைகளை தோளிலும், இதயத்திலும் சுமந்த குடும்பம். எல்லாவற்றையும் கடவுளின் திட்டத்திற்கு ஒப்படைத்துவிட்டுக் கடவுளின் பணியில் தங்களை முழுமையாகக் கரைத்தக் குடும்பம். உலகிற்காக உண்மையோடும், உண்மையான அன்போடும் துன்பங்களைத் தாங்கி, கடவுளின் மகிமைக்காகவும், உலக மக்களின் விடுதலைக்காகவும் அர்ப்பணமாக்கிய குடும்பம்.
நமது குடும்பங்கள் திருக்குடும்பத்தில் காணப்பட்ட பண்புகளை இன்று கொண்டிருக்கின்றனவா? ‘இல்லை’ என்றே பதில் அமைகிறது. அலைபேசி மட்டும் போதும் அந்தரத்தில் அரண்மனைக் கட்டி வாழ்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் பிள்ளைகள். இருசக்கர வாகனம் கிடைத்தால் விண்ணைத் தொட்டு விடலாம் என்று நினைக்கிறார்கள் வளரிளம் இளைஞர்கள். அன்று 12 வயதில் காணாமல் போன சிறுவன் இயேசு, ஆலயத்தில் இருந்து ஞானிகளோடு விவாதித்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் (லூக் 2:40-49). பெற்றோரிடம் ‘ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பது தெரியாதா?’ என்று கேட்டார். இன்று நமது பிள்ளைகள் ‘ஏன் என்னைத் தேடினீர்கள்; நான் எங்கேயும் இருப்பேன், வருவேன், போவேன்; அதனால் உங்களுக்கு என்ன?’ என்று கேள்வி கேட்கின்றனர். ஆலய வழிபாடுகள் வேண்டாம், மறைக்கல்வி வேண்டாம், பங்கேற்பு அமைப்புகள் வேண்டாம், அன்பியம் வேண்டாம், அலைபேசி மட்டும் போதுமென்று வாழ்கிறார்கள். இதனால் பொய் பித்தலாட்டம், கொலை, கொள்ளை, மதுபோதை போன்றவற்றிற்கு அடிமையாகி அழிந்து கொண்டிருக்கின்றனர். குடும்பங்கள் அமைதியை இழந்து தவிக்கின்றன. இச்சூழலைத் தவிர்க்க வேண்டுமென்றால் குடும்ப செபம், குடும்ப செபமாலை போன்றவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். பெற்றோரும், பிள்ளைகளுக்கு எடுத்துக்காட்டாய், முன்னுதாரணமாய் முன் செல்ல வேண்டும்.
இறுதியாக, கடவுள் கொடுத்த வாழ்வு அழகானது; அற்புதமானது! ஒரே ஒரு முறை கிடைக்கும் இந்த வாழ்வை வாழ்வாங்கு வாழ்வோம்; குடும்பங்களை நேசிப்போம்; அன்பைப் பெற்று, அன்பைக் கொடுத்து வாழ்வோம். நல்ல குடும்பங்களே, நல்ல சமூகத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்து நற்கனி கொடுப்போம்; நல்வாழ்வு வாழ்வோம்.