Namvazhvu
திருத்தூது மடல் ஒரு பார்வை மனிதனின் மகத்துவம் மற்றும் துயரம்!
Tuesday, 10 Oct 2023 07:31 am
Namvazhvu

Namvazhvu

கடவுளே, ஒருபோதும் என்னைக் கைவிடாதேயும்என்கிற கடைசி வார்த்தையோடு தன் சுவாசத்தை நிறுத்தியபோது பிளேஸ் பாஸ்கலுக்கு வெறும் 39 வயது. குறுகிய காலத்திலும் அர்த்தமிகு வாழ்வு வாழ்ந்த அவரது பிறப்பின் இந்த நான்காம் நூற்றாண்டில் அவரது பங்களிப்பைக் கொண்டாடும் விதமாய் கடந்த 19, ஜூன் அன்று திருத்தந்தை பிரான்சிஸ்மனிதனின் மகத்துவம் மற்றும் துயரம்’ (Sublimitas et miseria hominis) என்கிற திருத்தூது மடல்தனை வெளியிட்டார். பாஸ்கல் வார்த்தைகளை உள்வாங்கி, அவரது மடல் வெளிக்கொணரும் சிந்தனைகள் இன்றைய நமது வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கின்றன

யார் பிளைஸ் பாஸ்கல்?

பிரான்ஸ் தேசத்தின் கிளர்மான்ட் நகரில் ஜூன் 19, 1623-இல் பிறந்தவர்தான் உலகப் புகழ்பெற்ற கணிதவியலாளரும், தத்துவ ஞானியுமான பிளைஸ் பாஸ்கல். தனது மூன்றாவது வயதில் தாயை இழந்தார். வரி வசூல் அதிகாரியான இவரது தந்தை கணிதத்திலும், அறிவியலிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். எனவே, அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் மகனுக்கு வீட்டிலேயே கல்வி கற்றுத் தந்தார். கூடவே பல்வேறு மொழிகளையும் கற்பித்தார். அறிவுக்கூர்மை மிக்க சிறுவன் பாஸ்கலுக்குக் கணிதத்தில் அளவுகடந்த ஆர்வம் ஏற்பட்டது. அதன் விளைவாய், வடிவியலைக் கற்றுத் தேர்ந்து, முக்கோணங்கள் குறித்து, பல விதிகளை உருவாக்கினார். வடிவியலில் பெரிய சாதனையான கூம்புவெட்டுகள் பற்றி 16வது வயதில் நீண்ட கட்டுரையும் எழுதினார். அதில் அவர் விவரித்த புதிய தேற்றம், இன்றளவும்பாஸ்கல் தேற்றம்என்று பயன்பாட்டில் உள்ளது.

மூன்று ஆண்டுகள் கடுமையான முயற்சிக்குப்பின் 1642-இல் தந்தையின் அலுவலகக் கணக்குகளை எளிதுபடுத்தும் விதமாய் முதல் கூட்டல் கணினியை உருவாக்கினார். நவீன பொருளாதாரம், சமூக அறிவியல் வளர்ச்சியைக் கணிக்க நிகழ்தகவு கோட்பாட்டை உருவாக்கினார். வாயு மற்றும் திரவவியலைக் குறிக்கும் பாய்ம இயக்கவியலில், அழுத்தம் பற்றிய இவரது விதி உலகப் புகழ்பெற்றது. இவ்விதியை அடித்தளமாகக் கொண்டு ஏராளமான கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்ஙனம், அறிவியலில் ஆழ்ந்திருந்தவர் நவம்பர் 23, 1654-இல் சிறப்பான ஆன்மிக அனுபவம் ஒன்றைப் பெற்றார். அதனை அவர்நெருப்பின் இரவு’ (Night of fire) என வர்ணிக்கின்றார்.

தனக்குள் ஏற்பட்ட ஆன்மிக அனுபவத்தைத் தொடர்ந்து விஞ்ஞானம், கணித ஆய்வுகளை விட்டுவிட்டு தத்துவம், மத காரியங்களில் அதிகக் கவனம் செலுத்தத் துவங்கினார். இறைநம்பிக்கை, அன்பு, சுதந்திரம், அறிவியலுக்கும்-ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அவர் பகிர்ந்த வார்த்தைகள் இன்றும் ஆழம் மிகுந்தவை. அன்றாட வாழ்வின் எதார்த்தங்களைப் பிரதிபலிப்பவை. அவரது பலமே இடைவிடாத எதார்த்தவாதமாகும். அவற்றுள் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டுவதன் வாயிலாக நமது வாழ்வின் மகத்துவத்தை அசைபோடுவோம்.

வாழ்வின் மகத்துவம் எங்கே?

மனித நிலை: இது குறித்துப் பேசுகையில் பாஸ்கல்பகுத்தறிவால் ஒளியூட்டப்படும் எதார்த்தத்தை’ (reality illuminated by reason) சுட்டிக் காட்டுகிறார். மனிதன் ஒரு சில சமயங்களில் தன்னை உயர்ந்தவனாகவும், வேறு தருணங்களில் தானே தனக்கு அந்நியனாகவும், பலவீனமானவனாகவும் உணர்கிறான். அவன் தனது பகுத்தறிவு மற்றும் உணர்வுகளை ஆளுகை செய்யும் திறன்களால் உயர்ந்தவனாக உணரலாம். ஆனால், உண்மையை நாம் அறிவினால் மட்டும் காண்பதில்லை; அன்பினாலும் காண்கிறோம். நம்முடைய புத்திசாலித்தனம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கும் அதிகமாக நமது மகத்துவத்தைக் குறித்தும், பலவீனங்களைக் குறித்தும் நாம் அறிய வேண்டும். அதுவே சிறந்தது, தகுந்தது என்பார். அறிவு கொண்டு தன் பலம், பலவீனங்களை மனிதன் உணர்வதே வளர்ச்சிக்கு உகந்தது. ‘எனக்கு எல்லாம் தெரியும்என்கிற மமதை, ‘என்னிடம் குறையே இல்லைஎன்கிற மேதாவித்தனம் எந்தளவிற்கு நம்மைச் சூழ்ந்துள்ளன?

நமது அச்சம்: ஒருவர் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது. இது கடவுளை நம்பி, நன்மையைப் பெறலாம் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால், ஐயத்தினாலும், அவநம்பிக்கையினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. இவ்வச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குகிறது. முதல் வகையினர் இறைவனை இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். நாம் எந்நிலையில் இருக்கிறோம்?

நமது அறவாழ்வு: ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரண முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம்; அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும். அற வாழ்வின் அளவுகோல் சிறப்பு முயற்சிகள் அல்ல; தினசரி நிகழ்வுகளே! சட்டங்கள், திட்டங்கள் என்று வாழ்வைக் கடத்தும் நமது தினசரி வாழ்வு எப்படிச் செல்கிறது? அறிவியலின் கண்காணிப்புக் கேமராக்களுக்குப் பயந்து வாழும் நிலையா? இல்லை, கடவுளின் மனசாட்சிக்குப் பயந்து செயல்படும் முறையா?

நமது நீதி; அதிகாரம்: அதிகாரமில்லாத நீதி திறமையற்றது. நீதியில்லாத அதிகாரம் கொடுமையானது. நீதியும், அதிகாரமும் சேர்ந்திருக்கும்படி செய்ய வேண்டும். அதன் மூலம் நீதியானது எதுவும் வலிமை பெற்றிருக்க வேண்டும். வலிமையுள்ளது எதுவும் நீதியாயிருக்க வேண்டும். நமது சிபாரிசுகள், படைபலங்கள், பண முடிச்சுகள், பதவிகள் நீதியை விலைக்கு வாங்குவது நியாயமா? அதிகாரங்கள் அதற்குத் துணை நிற்பது அறமா?

நமது வாழ்வின் அர்த்தம்: மனித இதயம் கடவுளை அறியவும், தொண்டு வாழ்க்கை வாழவும் கடவுளின் கருணை மட்டுமே உதவுகிறது. பாஸ்கல் தனது மரண தருணத்தில் சொன்னது: “மருத்துவர்கள் உண்மையைச் சொன்னால், என் நோயிலிருந்து மீண்டு வர கடவுள் வாய்ப்பளித்தால் எனது மீதமுள்ள நாள்களை வேறு எதற்குமன்றி ஏழைகளுக்குப் பணிபுரியவே அர்ப்பணிப்பேன்.

மரணத்தின் மர்மத்தை ஒளிரச் செய்யும் உண்மையான ஒளி கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து வருகிறது. பாஸ்கலின் உள்ளக்கிடக்கில் இருந்து வந்த வார்த்தைகளில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. வாழ்வின் அர்த்தமே பிறர்நலப் பணிகளில் அடங்கியுள்ளது. இதனை உணர்ந்து பொதுச் சேவைகளில் நம்மை ஈடுபடுத்துவோமா!