‘மாமன்னன்’ திரைப்படம் பார்த்தீர்களா? அதில் இனிமை ததும்பும் ஓர் அழகிய பாடல் வருகிறதே... கேட்டீர்களா? அந்தப் பாடலின் சொற்கள் எல்லாம் புரிந்தனவா?
அந்தப் பாடலைப் பற்றிப் பேசுமுன், எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைச் சொல்கிறேன். அருள்பணி அனுபவத்திற்கென்று அனுப்பப்பட்ட அந்தக் கிராமத்துப் பங்குத்தளத்தில் ஒரு நாள் பங்குத் தந்தையைப் பார்ப்பதற்காக, அவரது அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தேன். நின்று கொண்டிருந்த ஒரு நபரோடு அவர் பேசிக்கொண்டிருந்தார். “மன்னிக்கவும், நீங்கள் பேசுங்கள். நீங்கள் பேசி முடித்த பிறகு, நான் மீண்டும் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
பத்து நிமிடங்கள் கழித்து நான் மீண்டும் நுழைந்த போதும் அந்த நபர் நின்றுகொண்டே பேசிக்கொண்டிருந்தார். நான் வந்ததைப் பார்த்ததால், “சரி, பார்ப்போம்” என்று அவரிடம் பங்குத்தந்தை சொன்னதும், அந்த நபர் வணங்கி விட்டு வெளியேறினார். நான் பங்குத்தந்தையிடம் கேட்டேன்: “இவ்வளவு நேரமா அவர் நின்னுக்கிட்டே இருந்ததைப் பார்த்தேன். அவரை உட்காரச் சொல்லக் கூடாதா?” அவர் சொன்னார்: “உனக்குப் புரியாது. எல்லாரையும் உட்கார வச்சுப் பேச முடியாது. சிலரை உட்காரச் சொன்னா, சில நாள்கள்ல நம்ம தலை மேல உட்கார்ந்திடுவாங்க.”
பிறரை மதித்தால், மரியாதையோடு, மனிதநேயத்தோடு பிறரை நடத்தினால், நம்மீது அவர்கள் அதிகாரம் செலுத்தத் தொடங்கி விடுவார்கள் என்ற எண்ணம் எவ்வளவு அபத்தமானது! மனித நேயத்தைத் தொலைத்து விட்டு, எல்லா மனிதருக்குரிய மாண்பை, மதிப்பை மறுப்பது எவ்வளவு பெரிய அக்கிரமம்!
அமர்ந்து பயணிப்பதற்குத் தனக்கு உள்ள உரிமையை விட்டுத் தர மறுத்ததால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் பெயர் ரோஸா பார்க்ஸ்! அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் உள்ள மான்ட்காமரி எனும் நகரில் வெள்ளையரை ஆட்டிப் படைத்த நிறவெறி பல்வேறு விநோதச் சட்டங்களை உருவாக்கியிருந்தது. பேருந்துகளின் முன் பகுதியில் வெள்ளையருக்கென்று தனிப் பகுதி இருந்தது. கறுப்பினத்தவர் அந்த இருக்கைகளில் அமரக் கூடாது. அவர்களுக்கென்று சில இருக்கைகள் பின்னே ஒதுக்கப்பட்டிருந்தன.
மான்ட்காமரி நகரில் தையல் வேலை செய்து வந்த ரோஸா, 1955 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி மாலையில் களைப்போடு பேருந்திற்காகக் காத்து நின்று, அது வந்ததும் ஏறி, கறுப்பின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தார். அவருக்கருகே வேறு மூன்று கறுப்பின நபர்கள் வந்து அமர்ந்தனர்.
வெள்ளையருக்கான பகுதியில் எல்லா இருக்கைகளிலும் ஆள்கள் இருந்தனர். இருக்கை எதுவும் காலியாக இல்லை. ஒரு நிறுத்தத்தில் சில வெள்ளையர்கள் ஏறிவர, அவர்களுக்கு இருக்கை இல்லை. அவர்கள் உட்காருவதற்கு இடமில்லை என்பதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர்-நடத்துநர் ரோஸாவிடம் வந்தான்.
அமெரிக்கப் பேருந்துகளில் நம் ஊரில் உள்ளது போல ஓட்டுநர் ஒருவர், நடத்துநர் ஒருவர் என்பதில்லை. ஓட்டுநரே நடத்துநர். இரண்டு வேலைகளையும் ஒரே நபரே செய்தார்.
தன்னை நோக்கி வந்த ஓட்டுநர்-நடத்துநர் ஜேம்ஸ் ப்ளேக் எனும் வெள்ளைய வெறியனை ரோஸா பார்த்தார். அவனை அவருக்குத் தெரியும். இதற்கு முன்பு ஒருமுறை ரோஸாவை அவன் அவமதித்திருந்தான். வெள்ளையருக்கான இருக்கைகள் முன்னே இருந்ததால், முன்னிருந்த கதவு வழியாக வெள்ளையரே வருவது வழக்கம். இதனால் கறுப்பின மக்கள் பின்னே இருந்த கதவு வழியாகவே ஏறி பேருந்துக்குள் வந்தனர். ஒரு நாள் அவசரத்தில் ரோஸா முன்புறக் கதவு வழியாக ஏறி வந்ததைப் பார்த்து இந்த ஜேம்ஸ் ப்ளேக் அவரைப் பேருந்திலிருந்து இறங்கி, மறுபடியும் பின்புறக் கதவு வழியாக ஏறி வரச் சொன்னான். ஆனால், ரோஸா இறங்கிய மறுகணம், அவர் மீண்டும் ஏறி வரக் காத்திருக்காமல் வேகமாகப் பேருந்தை ஓட்டிச் சென்றுவிட்டான்.
இத்தகையவன் என்ன செய்வான் என்பது ரோஸாவுக்குப் புரிந்தது. அவன் வந்து நின்று, அமர்ந்திருந்த அந்த நான்கு கறுப்பின நபர்களையும் எழுந்து, அவர்களின் இருக்கைகளை வெள்ளையருக்குத் தருமாறு சொன்னான். மற்ற மூவரும் எழுந்து நிற்க, ரோஸா மறுத்தார்.
“நீ எழுந்து உன் இருக்கையைத் தரவில்லை என்றால், நான் காவல்துறையினரை அழைக்க வேண்டியிருக்கும்.”
“அழையுங்கள்!”
காவல்துறையினர் வந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், அவரின் துணிவு ஒரு பெரும் போராட்டத்திற்கு வித்திட்டது. ‘மான்ட்காமரி நகர்ப் பேருந்துகள் எதிலும் பயணிக்க மாட்டோம்’ என்று கறுப்பின மக்கள் அறிவித்தனர். நிறவெறியை எதிர்த்துப் போராடிய இந்தப் பெண் போராளிக்கு நிறவெறிச் சட்டங்கள் ஒழிந்த பின்னாளில் ஏராளமான விருதுகளும், சிறப்புகளும் கிடைத்தன.
சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், அவர் ஒரு தலித் என்பதால் அவரை உட்காரச் சொல்வதற்கு மனம் வராத ஒரு சாதி வெறியனின் சதிகளும், செயல்களும் தான் ‘மாமன்னன்’ படத்தின் பெரும் பகுதி.
சக மனிதர்கள் சிலரை விட நாம் உயர்ந்தவர்கள் என்று நம்ப வைப்பதற்காகப் பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் பச்சைப் பொய்தான் சாதி! ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதுதானே உண்மை! அப்படியென்றால், எப்படிப் பிறப்பிலேயே சிலர் உயர்ந்தோராகவும், சிலர் தாழ்ந்தோராகவும் ஆக முடியும்? என்று கேட்கத் தொடங்கி விட்டாலே, நாம் இந்த மூட வலையிலிருந்து தப்பி விடலாம். ஆனால், இப்படிச் சிந்திக்கும் திறனை, உள்ளதை உள்ளபடி பார்க்கும் திறனைப் பறித்து, பார்வையை மழுங்கடிப்பது சாதி சார்ந்த வெறி மட்டுமல்ல; மதம், மொழி, இனம் என்று பல்வேறு காரியங்கள்.
இவற்றில் எதற்கும் பலியாகி விடாமல், எப்போதும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டால்தான் நம் உள்ளம் நலமாய் இருக்க முடியும்.
சரி, முதலில் நான் சொன்ன அந்தப் பாடலுக்கு வருவோம். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து, விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ பாடியுள்ள அந்தப் பாடலை எழுதியது கவிஞர் யுகபாரதி. ‘நெஞ்சமே, நெஞ்சமே, கொஞ்சியே சொல்லுதே’ என்று தொடங்கும் அந்த இனிய பாடலில், ‘அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச் செல்ல நெஞ்சமில்லையே’ என்ற வரிகள் வருகின்றன. மற்ற வரிகளை எல்லாம் எளிதாகப் புரிந்துகொள்வோர் கூட, இந்த ‘மஞ்சும் பஞ்சும் ஒன்றே’ என்றால் என்னவென்று குழம்பலாம்.
‘மஞ்சு’ என்பது மேலே இருக்கிற மேகம். ‘பஞ்சு’ இங்கே கீழே நம் அருகில் இருப்பது. ‘மஞ்சு’ கீழே வந்தால் பஞ்சு! பஞ்சு மேலேறி ஊர்வலம் போனால் அது மஞ்சு! அதனால் ‘யார் எங்கிருந்தாலும் நாமெல்லாம் ஒன்றுதான்! நம்மில் உயர்வு, தாழ்வு இல்லை. நாம் அனைவரும் சமமே’ என்ற உண்மையை நாம் மனதார நம்பி, எல்லா மனிதரையும் மதிப்போடு, மரியாதையோடு நடத்துவதில் எப்போதும் கவனமாக இருந்தால் நம் வாழ்க்கை மேலும் வளம் பெறும்.